அனைத்து நாடுகளுடன் நெருக்கமாகவும் நட்புறவுடனும் செயற்படுவதே நோக்கம்: மைத்திரி

இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றும் செயற்பாடுகளில் உலகில் உள்ள அனைத்து நாடுகளுடன் நெருக்கமாகவும் நட்புறவுடனும் செயற்படுவது தனது நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தஜிகிஸ்தான் நாட்டுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, அந்நாட்டு ஜனாதிபதி எமோமாலி ராமோனுடன் நடந்த சந்திப்பின் போது இதனை கூறியுள்ளார்.

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தஜிகிஸ்தான் சென்றார். தலைநகர் துஷான்பேவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், இருநாட்டு தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

சுமூகமான உரையாடலின் பின்னர் இருத்தரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச வர்த்தகத்தை வளர்ச்சியடைய செய்வது, இருத்தரப்பு தொடர்புகளை வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் பிராந்திய பாதுகாப்பு, போதைப் பொருள் கடத்தலை தடுப்பது சம்பந்தமான விடயத்தில் ஒத்துழைப்புடன் செயற்படுவது சம்பந்தமாகவும் இரண்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் தஜிகிஸ்தான் தேசிய அருங்காட்சியகத்திற்கு விஜயம் செய்துள்ளார். இதனையடுத்து, துஷான்பேவில் உள்ள நீர் மின் உற்பத்தி நிலையத்தை பார்வையிட்டுள்ளார். அங்கு தஜிகிஸ்தான் துணைப் பிரதமரை சந்தத்துள்ளார்.

துணைப் பிரதமர் ஏற்பாடு செய்திருந்த விசேட மதிய போசன விருந்தில் ஜனாதிபதி கலந்துகொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×

Like us on Facebook