ஹிஸ்புல்லாஹ்வின் பல்கலைக்கழகத்திற்கு இன்னமும் அனுமதி கிடைக்கவில்லை!

தங்களுடைய பல்கலைக்கழகத்திற்கு இப்போதுவரை உயர் கல்வி அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெறவில்லை என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு புனாணைப் பகுதியில் தனியார் பல்கலைக்கழகத்தினை ஹிஸ்புல்லாஹ் அமைத்துவருகின்றார். இது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.

இப்பல்கலைக்கழகத்தில் சரியா பாடங்கள் நடத்தப்படவுள்ளதாகவும், இது சரியாப் பல்கலைக்கழகம் என்றும் தேரர்களும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து இன்று 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக கிழக்கின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் முன்னிலையானார்.

இதன்போது, மட்டக்களப்பு – புனாணைப் பகுதியில் நிர்மாணிக்கப்படும் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில், ஹிஸ்புல்லாஹ்விடம் சுமார் மூன்றரை மணிநேரம் ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணை முடித்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இதன்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய அவர், எங்களது பல்கலைக்கழகம் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. இந்நிலையில் அங்கு எந்தவொரு கற்கை நெறியும் கற்பிக்கப்படவில்லை என்பதுடன், எந்தவொரு மாணவரும் உள்ளீர்க்கப்படவில்லை.

பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க வேண்டுமானால், உயர்கல்வி அமைச்சின் அனுமதி அவசியமாகும். இதற்கமைய, குறித்த நிறுவனத்திற்கும், அதில் கற்பிக்கப்படவுள்ள கற்கைநெறிகளுக்கும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்பதை விசாரணைக் குழுவில் தெளிவுபடுத்தினேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×

Like us on Facebook