ஜனாதிபதி தேர்தலை ஒத்திபோட முயற்சி: ஒத்துழைக்க வேண்டாம்-புதிய சட்டமா அதிபருக்கு கடிதம்!

ஜனாதிபதித் தேர்தலை இந்த ஆண்டு இறுதியில் நடத்தாமல் மேலும் ஆறு மாத காலத்துக்கு ஒத்திப்போடும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தேசிய நாட்டுப்பற்று இயக்கத் தலைவர் எல்ல ஞானவன்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

அத்தகைய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவோ, உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகி அதற்கு ஆதரவாக வாதிடவோ வேண்டாம் என புதிய சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் சட்டமா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் இந்த வருட முடிவில் முடிவடைகின்றது என்பதை ஏற்கனவே ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்றம் ஜனாதிபதிக்கு வழங்கிய பரிந்துரையில் தெட்டத்தெளிவாகத் தெரிவித்துள்ளது.

அவ்வாறிருந்தும் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மேலும் நீடிப்பது தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறிவதற்கு அரசமைப்பின் 129ஆம் பிரிவின் கீழ் ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அறிகின்றோம்.

அரசமைப்பில் ஏதேனும் விடயத்தில் தெளிவற்ற நிலை இருந்தால் மட்டுமே அது குறித்து உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறிய இந்தப் பிரிவின் கீழான ஆலோசனை நியாயாதிக்கத்தைப் பயன்படுத்தித் தமக்கு வழிகாட்டல் ஆலோசனையை வழங்கும்படி ஜனாதிபதி உயர்நீதிமன்றத்தைக் கோரலாம்.

ஆனால், இந்த விடயத்தில் அரசமைப்பு ஏற்பாடுகள் தெளிவாகவும் வெளிப்படையாகவும் உள்ளன. அவற்றுக்கு ஆலோசனை கேட்க வேண்டிய தேவை இல்லை. ஆகையால், இந்த விடயத்துக்கு ஆலோசனை வழங்கவோ தவறான கருத்துக்களை உயர்நீதிமன்றத்தில் தோன்றி வழங்கவோ வேண்டாம் எனக் கோருகின்றேன்”  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×

Like us on Facebook