சிறுவர் துஷ்பிரயோகம் உட்பட பல குற்றச்சாட்டு – அதிபர் பதவி விலகல்

வவுனியாவிலுள்ள பிரபல பாடசாலையில், காவலாளி மாணவியொருவரை துஸ்பிரயோகம் செய்தமைக்கு அதிபர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை பெற்றோர், பழைய மாணவர்கள் முன்வைத்த நிலையில் அதிபர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக பொதுச்சபையில் தெரிவித்தார்.

குறித்த பாடசாலையின் அபிவிருத்திச் சங்க பொதுக்கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் அதிபர் த.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது அண்மையில் பாடசாலையின் காவலாளி மாணவியொருவரிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றமை சபையில் பகிரங்கமாக பாடசாலையின் ஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், காவலாளி தொடர்ந்தும் பாடசாலையில் கடமையாற்றுவதாகவும் அதற்கு அதிபர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதன்போது சபையில் அனைவரும் குழப்பமடைந்து அதிபருக்கு எதிராக கோசமெழுப்பினர்.

பெண் ஆசிரியர்கள் பலரும் ஆண் ஆசிரியர்கள் சிலரும் அதிபருக்கு ஆதரவாகவும் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு நடவடிக்கை எடுக்காமைக்கு ஆதரவாகவும் கோசங்களை எழுப்பினர்.

இதன்போது ஆசிரியர்களுக்கு எதிராகவும் பாடசாலைக்கு மாணவிகளை அனுப்புவதற்கு அச்சம் கொள்வதாகவும் தெரிவித்து பெற்றோர் கோசங்களை எழுப்பியதுடன், சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு ஆதரவாக இருந்த ஆசிரியர்களையும் அதிபரையும் வெளியேறுமாறும் கோரினர்.

இந்நிலையில் CCTV பதிவில் குறித்த சம்பவம் பதிவில் இருந்த போதிலும் மாணவியும் அவரின் பெற்றோரும் நடவடிக்கைக்கு உடன்படவில்லை என தெரிவித்த அதிபர், இதன் காரணமாகவே தான் பொலிஸிலோ ஏனைய இடத்திலோ முறையிடவில்லை என தெரிவித்தார். அத்துடன் இனி தான் அதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் பாடசாலையில் பல பண மேசாடிகள் இடம்பெறுவதாக பழைய மாணவர்கள் சங்கத்தால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து, தான் அதிபர் பதவியிலிருந்து விலத்துவதாக தெரிவித்து சபையிலிருந்து வெளியேறியிருந்தார்.

இதன்போது பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் சிலர் அதிபரின் முடிவை வரவேற்றதுடன் புதிய அதிபரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்து கூட்டத்தினை நிறைவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×

Like us on Facebook