சாம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து மெஸ்ஸியின் பார்சிலோனா வெளியேற்றம்.. லிவர்பூல் அசத்தல்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் அரையிறுதி இரண்டாவது லெக் போட்டியில் பார்சிலோனா அணியை வீழ்த்தி லிவர்பூல் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

முன்னதாக நடந்த அரையிறுதி முதல் லெக் போட்டியில் பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில், ஆன்பீல்ட் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி இரண்டாவது லெக் போட்டியில் லிவர்பூல் அணி நட்சத்திர வீரர் முகமது சாலா இல்லாமல் களமிறங்கியது.

போட்டி தொடங்கிய 7வது நிமிடத்தில் லிவர்பூல் அணி வீரர் Divock Origi முதல் கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் லிவர்பூல் அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதி தொடங்கிய 54 மற்றும் 56வது நிமிடம் என லிவர்பூல் அணி வீரர் Georginio Wijnaldum இரண்டு கோல் அடித்து அசத்தினார். போட்டி விறுவிறுப்பான நிலையில் 79வது நிமிடத்தில் Divock Origi மீண்டும் ஒரு கோல் அடித்து மைதானத்தை அதிர வைத்தார்.

இறுதிவரை போராடிய பார்சிலோனா அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் லிவர்பூல் அணி 4-0 என பார்சிலோனாவை வீழ்த்தியது. அரையிறுதி போட்டியின் இரண்டு லெக் போட்டியின் கோல் கணக்கின் படி 4-3 என்ற கோல் கணக்கில் வென்ற லிவர்பூல் அணி சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

பார்சிலோனா அணி அரையிறுதி போட்டியுடன் தொடரிலிருந்து வெளியேறியது. யூன் 1ம் திகதி மாட்ரிட்டில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற முதல் அணியாக லிவர்பூல் அணி கால்பதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×

Like us on Facebook